'கனகாம்பரம்' கதையிலிருந்து
.....எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த ராமு, தெருவில் மணி
எதிரே வருவதைக் கண்டு மிகவும் சங்கடமடைந்தான். அப்பொழுது மணியைக் கண்டு
பேசுவதா வேண்டாமா என்று கூட அவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. வீட்டுக்கு
வந்திருந்ததாகச் சொல்வதா வேண்டாமா? அவன் மனைவி சொன்னதைச் சொல்வதா வேண்டாமா?
இப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் எழுந்தன. ஒருவேளை மணியின் அநுமதியின் பேரில்
அவ்வளவு சகஜமாகப் பேசியிருந்தால் சரியாய்ப் போய்விடும். இல்லாவிட்டால் தான்
சொல்லுவதால் அந்தப் பெண்ணின் அசட்டுத்தனமோ, அல்லது அறியாமையோ மணிக்குக்
கோபத்தை உண்டாக்கினால்? அவர்களிடையே பெருத்த மனத்தாங்கல் ஏற்பட்டால்? யார்
கண்டார்கள்? மனித சுபாவம் எது வேண்டுமானாலும் நினைக்கும். அந்த மாதிரி
மனஸ்தாபத்திற்குத் தான் காரணமாகக்கூடாது. அவள் தானாக மணியிடம் முழுவதும்
சொல்லியிருக்கிறாள் என்பது என்ன நிச்சயம்? சொல்லியிராவிட்டால் அசட்டுத்தனம்
ஆபத்தாக அல்லவோ முடியும்?
இவ்விதம் எண்ணியவனாய், ராமு, சடக்கென்று ஒரு சந்தில் திரும்பி மணியின்
கண்ணில் படாமல் தப்பினான். ஆனால் அன்று காலையில் நடந்த சம்பவத்தைத் தன்
மனத்தைவிட்டு அகற்ற அவனால் முடியவில்லை. அந்தப் பால்வடியும் புதுமுகத்தின்
களங்கமற்ற பார்வை; தடங்கல், திகைப்பு, பயம் இவையற்ற அந்தத் தெளிவான
சொற்கள்! ‘இதோ வந்துடுவா!’ என்றாள் அவள். அதில் என்ன நேர்மை! என்ன மரியாதை!
இன்னும், தன்னை உள்ளே வரும்படி அழைத்ததில் என்ன நம்பிக்கை! – தன்
புருஷனின் நண்பன் என்றதால் ஏற்பட்டது! ‘சே, சே, அந்த நாலு வார்த்தைகளில்
அவள் எவ்வளவு அர்த்தத்தை வைத்து விட்டாள்! நமையும் நம்பினாள்… அவளா அசடு?
அதனால்தான் எனக்கு அந்தக் கலவரம் ஏற்பட்டது. மணியை மாலையில் கண்டு அவனிடம்
சொல்ல வேண்டும்’. இந்த மாதிரி எண்ணிக்கொண்டு ராமு நடந்தான். ஆனால் தான்
முதலில் அந்தப் பேச்சை எடுப்பதற்கு முன்பு, நிலைமை எவ்வாறு இருக்கிறது
என்று அறிந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். மாலை ஏழு மணிக்குச்
சென்றால் அவன் நிச்சயம் வீட்டிலிருப்பான் என்று எண்ணினான்.
('கனகாம்பரம்' கதையில் கு.ப.ராஜகோபாலன்)
வீட்டிலிருப்பான் என்று எண்ணினான்.
No comments:
Post a Comment