Sunday, 3 February 2013

பாவண்ணன்

பாவண்ணன்: 

பாவண்ணன்

விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் உள்ள கிராமம் எங்கள் வளவனூர். பழைய நிலஅமைப்பில் அது தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தது, இப்போதைய அமைப்பில் அது விழுப்புரம் மாவட்டத்துக்குள் வருகிறது. அந்த ஊரில் நான் 1958 ஆம் ஆண்டில் பிறந்தேன். என் அம்மா பெயர் சகுந்தலா. அப்பா பெயர் பலராமன். தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய அப்பா காலத்தில் மாடு, கன்று, தோட்டம், வயல் என்று எல்லாம் இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ பங்காளித் தகராறில் எல்லாம் அழிந்துபோய்விட்டன. 
கோயில் நிலத்தில் கூரைவீடு கட்டிக்கொண்டு வாழும்படி நேர்ந்துவிட்டது. அது அவருடைய நெஞ்சில் அழுத்தமான வடுவாகப் பதிந்துவிட்டது. ஒரு விவசாயியாக மறுபடியும் வாழத் தொடங்கவேண்டும் என்று கனவுகளோடு இருந்தார். கொஞ்சம்கொஞ்சமாகப் பணம்சேர்த்து ஏரிக்கரைப்பாசனத்தில் கால்காணி நிலம் வாங்கினார். ஆனால் இரண்டுமூன்று ஆண்டுகள் கூட அதில் விவசாயம் செய்யமுடியவில்லை. அவருக்கான மருத்துவம், குடும்பச்செலவுகள், கடன்கள் எல்லாவற்றையும் சமாளிக்க விற்றுவிடவேண்டியதாக இருந்தது. 
குடும்பத்தில் நான் மூத்த பிள்ளை. எனக்கு இரண்டு சகோதரிகள். இரண்டு தம்பிகள். வறுமை ஒரு கரிய நிழலாக எங்கள் குடும்பத்தின்மீது படிந்திருந்தது. ஆனால் அதன் வலியை நாங்கள் உணராதபடி அம்மா எங்களை அன்போடும் ஆதரவோடும் பார்த்துக்கொண்டார். கடைத்தெருவில்தான் அப்பா கடை வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நான்தான் கடைக்குச் சென்று வீட்டுச் செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு, அப்படியே அரிசி, பருப்பு, காய்கறி எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு திரும்புவேன். வருமானம் இருக்கும் சமயங்களில் அப்பா பணம் தருவார். 
இல்லாத சமயங்களில் ஒன்றும் செய்ய முடியாது. அன்று கேழ்வரகுமாவையும் முருங்கைக்கீரையும் பிசைந்து எல்லாருக்கும் அடை செய்து கொடுப்பார் அம்மா. சுடச்சுட நாங்கள் அதை வாங்கி, மண்ணெண்ணெய் விளக்கில் சுற்றி உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம். எங்களுக்குக் கதை சொல்லி தூங்கவைத்துவிட்டு, அப்பா வரும்வரை காத்திருப்பார் அம்மா. வறுமையின் துன்பத்தைத் தன் அன்பாலும் சகிப்புத்தன்மையாலும் வென்று குடும்பம் நொடிந்துபோகாமல் காப்பாற்றியது அம்மாதான்.
 எப்படியாவது நான் படித்துப் பட்டம் வாங்கவேண்டும் என்பது அவருடைய கனவு. அப்போதுதான் நல்ல வேலையைப் பெறமுடியும், குடும்பத்தைத் தாங்கமுடியும் என்பது அவர் நம்பிக்கை. ஆனால் அப்பா தன் இயலாமையின் காரணமாக, பள்ளிப்படிப்போடு நிறுத்திவிடலாமா என்று பல முறை சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய வற்புறுத்தல் அதிகமானது. தற்செயலாக ஒரு கோயில் திருவிழாவுக்கு புதுச்சேரியிலிருந்து எங்கள் மாமா ஊருக்கு வந்திருந்தார். தங்கிப் படிப்பதற்கு அவரிடம் பேசி அனுமதி பெற்றார் அம்மா. 
புதுச்சேரியில் உள்ள தாகூர் கல்லூரியில் கடைசிநாளன்று சென்று விண்ணப்பம் வாங்கி முழுமை செய்து கொடுத்தேன். கணிதப்பிரிவில் எனக்கு இடம் கிடைத்தது. அம்மாவிடம் நகைகள் என்று சொல்லும்படியாக அப்போது ஒரு ஜோடி கம்மல், மூக்குத்தி, ஒரு வங்கி மோதிரம் மட்டுமே இருந்தன. அவை அனைத்தையும் விற்றதில் நானூற்றிசொச்சம் ரூபாய் கிடைத்தது. நானூறு ரூபாயை அம்மா என்னிடம் கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பிவைத்தார். கல்லூரிக் கட்டணத்துக்கு முந்றூற்றுத் தொண்ணூறு ரூபாயும் என் செலவுக்குப் பத்து ரூபாயும் வைத்துக்கொள்ளச் சொன்னார்.
 வளவனூரைவிட்டுப் பிரிந்த பிறகுதான் அதை நான் எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதை உணர்ந்தேன். என் கனவுமுழுக்க என் ஊரின் சித்திரங்களாலேயே நிறைந்திருந்தன. அக்கம்பக்கம் எந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு அழகான ஏரி ஒன்று எங்கள் ஊரில் உண்டு. பக்கத்திலிருந்த எல்லாப் பாளையங்களுக்கும் பாசனத்துக்கு ஏரித்தண்ணீர் மதகுகள் வழியாகப் போகும். உயர்ந்த கரைகள். கரைநெடுகப் புளிய மரங்கள், ஆலமரங்கள், பனைமரங்கள், வேப்ப மரங்கள் என வரிசைவரிசையாக நிழல் தந்தபடி இருக்கும். எல்லா நேரங்களிலும் சிலுசிலுவென்று காற்றடித்தபடி இருக்கும். அந்த நிழலில் நானும் என் நண்பனும் பேசிக்கொண்டே நடப்போம். 
கல்கியின் நாவல்களில் திளைத்திருக்கும்போது, அந்த ஏரி எங்கள் கண்களுக்கு தளும்பும் காவேரியாகத் தெரியும். வந்தியத்தேவனாக எங்களை நினைத்துக்கொள்வோம். ருஷ்ய நாவல்களில் மிதந்திருக்கும்போது, அதே ஏரி பனிபடர்ந்த மிசிசிபி நதியாக மாறிவிடும். எங்கள் கற்பனைக்கு அளவே இருந்ததில்லை. ஏரிக்கரையை ஒட்டி ரயில்வே நிலையமும் தோப்பும் இருந்தன. படிப்பதற்கு அங்கேதான் செல்வோம். 
பெரிய புத்தகங்கள் என்றால் ஒரு புத்தகம், பக்கங்கள் குறைந்த புத்தகங்கள் என்றால் இரண்டு புத்தகங்கள் என ஒரே மூச்சில் உட்கார்ந்த வேகத்தில் படித்து முடிப்போம். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை, அந்த அமைதியான சூழலில் பேசிப்பேசித்தான் வளர்த்துக்கொண்டோம்.[


No comments:

Post a Comment