Thursday, 7 March 2013

றெக்கை கட்டி நீந்துபவர்கள்

றெக்கை கட்டி நீந்துபவர்கள் 
சிறுகதைத் தொகுதி 
ஆசிரியர் : பாரதிபாலன் 
பக்கங்கள்: 136
விலை:ரூ.95/-
வெளியீடு:சந்தியா பதிப்பகம் 
புதிய எண் .77,53வது தெரு,
9வது அவென்யூ, அசோக் நகர்,
சென்னை-600083(தொ.பே.044-24896979
-------------------------------
ஒவ்வொரு கலைவடிவங்களும் தனக்கான வடிவத்தைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. அப்படி நேர்வதைத் தான் நேர்த்தி என்கிறோமோ?- முன்னுரையில் பாரதிபாலன் 

தேனி மாவட்டத்தில் எந்தெந்த மாதிரியோ  கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள்.நுண்மாண் நுழைபுலம் கண்டு தமிழ் மண்ணின் தனி நிறத்தை,தனிக்குரலைத் , தனிச் சுவையை  கூர்ந்து கவனித்துப் பதிவு செய்கிறவர் வரிசையில் சினிமாவுக்கு வந்த பாரதிராஜா , இளையராஜா. இப்படி அந்த மாவட்டத்தில் பலர்.
 எழுத்தாளர்கள் குறைவு. 
ஈடு செய்ய வந்தவர் பாரதிபாலன் 
சின்னமனூரின் குசச்செட்டியார்,மரத்தச்சன் நெசவாளர், பூட்டு செய்கிறவர்,பாம்பாட்டி வித்தைக்காரர்,பூம்பூம் மாட்டுக்காரர், நகை செய்கிறவர் போன்றே சிறுகதை வடிவத்தில்  கலையைச் சிருஷ்டித்துப் பார்க்கிற, பெரிய பலன்களை எதிர்பாராத கலா திருஷ்டியின் சிற்றுளி பட்ட சிற்பங்களாக 12 சிறுகதைகள்.இந்தத் தொகுதியில்.
நேர்வது மட்டுமே நேர்த்தியாகாது.செய்திறன், உணர்திறன் கூடினாலே நேர்த்தி கிட்டும் என்று இந்தத் தொகுதியின் ஒவ்வொரு சிறுகதையிலும் சொல்லாமல் சொல்கிறார் பாரதிபாலன்.
"ஏலே,ஒன்பதுக்கு அடுத்து என்னடா?" ஒரு பையன் கேட்பான்.
பத்து என்று புதிருக்குப் பதில் சொல்வது போல் சுற்றி நிற்பவர்கள் சொல்லிச் சிரிப்பார்கள் 
பத்மநாபன் என்ற பெயர் கொண்டவர்களுக்கு இயல்பாக நேரும் சுருக்குப் பெயர் எத்தனை பேருக்கு அப்படி உறுத்தி இருக்கும்?அந்தப் பெயர்  எந்தெந்த விதமாக வெல்லாம் கூப்பிடப்படும்? பாரதிபாலனின்செவிகள் பதிவு செய்து நமக்குள் ஒரு புன்னகையை வரவழைக்கின்றன.
பெயர் எண்ணாக மாறிவிடும்போது ஓர் உயிரில் ஒரு சோகம் பதிவாகி விடுகிறது.வளர்ந்து வாலிபனாகி,மணந்து பெண் பிள்ளை பெற்று அவளும் பெயருக்குப் பதில் எண் விளி பெறுவது கண்டு மனசு துடிக்கிறது. இந்த சின்னஞ்சிறு சோகமும் ஏக்கமும் கூட வாழ்க்கை வழங்கும் எழில் கோலம் தான்.'எண்களால் ஆனவர்கள் 'கதையில் .போட்டுக்காட்டி நெஞ்சை நெருடுகிறார் பாரதிபாலன் 
இயலாமையால் சுருங்குகிற போது தான் மனம் சுடுகிறது 'றெக்கை கட்டி நீந்துபவர்கள் ' கதையில் மனைவிடம் ஏதும் கேட்கமுடியாத, அறியமுடியாத அவளிடமிருந்து ஆறுதல் பெறமுடியாத, எவ்வளவு முயன்றும் அவளுக்குள் நுழைய முடியாத கணவன் ஒருவனின் இதய ஒலிகளை சிதார் வாத்தியத்தில் 
வருடுவது போல் வருடிக்காட்டுகிறார்.
முப்பது வருஷம் வேலைக்குப் போகும்போது கவனிக்கத் தவறிய சாலை வெய்யில் ரிடையர் ஆன பின் கவனிக்கப்படுகிறது.வேர்வைப் பிசுபிசுப்பிலும் 
மனுஷ நெரிசல் புழுக்கத்திலும் உணரப்பட்ட வெயில் அல்ல அது. வேறு விதமான வெயில்.வேலை பார்த்த கட்டிடங்களில், திறந்த ஜன்னல்களில் புகுந்து புகுந்து வெளிவந்து விளையாடும் புறாக்கள் இப்போது கவனிக்கப்படுகின்றன.மனசில் ஒரு தோல்வி.அலுவலக உறவுகளில் அடைந்த தோல்விகளை விட மகா தோல்வி.எனினும் 'கூடு திரும்புதல்' கதையில் வீடு திரும்பும் வயோதிகருக்கு  மீதமிருக்கிற பொழுதுகள் பற்றிய ஆறுதல்.நம் மனசின் ஒரு ஜன்னலில் சில புறாக்கள் நுழைந்து சிறகுகள் படபடக்க மற்றொரு ஜன்னலில் வெளியேறுகின்றன.
'பய புள்ளீக அம்புட்டையும் புடுங்கிப்போட்டு அகலமா ரோடு போடப்போறாங்கலாம்;நாலு வழிப்பாதையாம்! மூணு மயிலு நாலு மயிலு தூரம் எம்புட்டு மரங்க!அம்புட்டையும் தரைமட்டமாக்கிப் போட்டுட்டு தங்க நாற்கரச்சாலை கொண்டாரப்போராங் களாம் அப்புறம் எம்போல அப்புராணிங்க எல்லாம் இப்படி நடக்க முடியுமோ என்னவோ!' இருமருங்கிலும் புளிய மரங்கள் அடர்ந்த நிழல் படர்ந்த சாலையில் நடந்து சென்ற  மணியக்காரர் மன ஓலம் கேட்கிற கதை தான் 'ஒலியும் ஒளியும் '
"தேவி, இங்கே வாயேன்!"
"அடுப்புலே வெச்சிருக்கேன்"
"நெருப்போட விளையாடத்தான் பிடிக்குமாக்கும்?"
"அரைமணி தாமதமானாலும் உங்க வயித்திலே நெருப்பு மூண்டிடுமே !" 
"இதுவும் ஒரு பசி தான்,வா!"
ஒருநாள் ஒருபோழுதாவதாவது கலைந்த தலையோடோ, கலர் மங்கிய சேலையோடோ கண்டிராத காதல் மனைவி அடுப்பங்கரை வேள்வியில் அன்றாட குடும்பப் போக்கின் யக்ஞத்தில்  படித்த படிப்பை,இருந்த ரசனைகளை எல்லாம் கரைத்துக்கொள்ளும் சொல்லில் வராத சோகத்தைத் தீட்டிக் காட்டும்போது,கர்மயோகியாகி விட்ட மனைவியின் மன முடுக்கில் ஒரு துளி காதலுக்கு மனுப்போடும் கணவனின் கனவாகிவிட்ட பந்தங்கள் நம் வீட்டிலும் நிழலாடுவது,நீயும் நானும் வேறல்ல' கதையில்  புலப்படுகிறது.
கண்ணகி மதுரையை எரிக்கிறாள்.சந்தான லக்ஷ்மி நயவஞ்சக  நாடகம் போடும் கரஸ்பாண்டன்ட் முகத்தில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டுக் காறித் துப்புகிறாள்.நயவஞ்சக  நாடகத்தை வெகு நயமாகக் கையாளும் பாரதிபாலனிடம் மற்றொரு கலைப்பண்பு மறைந்திருப்பது'பெருந்தீனிக் காரர்கள் ' கதையில்  புலப்படுகிறது.
ஒரு தெரு, ஒரு வாடகைக்குடியிருப்பு,அங்கு வாழ்ந்த கணங்கள் வருடங்கள் அது சொந்தவீடு அல்லவென்பதால் அற்றுப்போய் விடுமா? அது என்னென்ன விதமாய் மனமூட்டத்தில் புகைமண்டலங்கள் எழுப்பும் என்று 'தெருவாசம்' அலைபாய வைக்கிறது.இப்படி12கதைகளுக்குள்ளும் பல்வேறு உணர்வுக்கோணங்கள் விரிந்தி ருப்பதைப் பட்டியலிட்டுக் காட்டவேண்டிய அவசியம் இருந்தாலும் இங்கே இடம் இல்லை.
இந்தத் தொகுதியில் ஆங்காங்கே இரைந்திருக்கும் மனிதர்கள் பொதுவாக இந்த ஹாட்சிப்ஸ் யுகத்தின் பாஸ்ட்-புட் கலாசாரத்தின் தலைதெறிக்கும் வேக்த்திற்கு மொழியில் அடங்காத எதிர்ப்புக்குரல்கள்.அதிகம் பேசத்தெரியாத
கலைத்திறன் இருப்பதால் பாத்திரங்களையே பேசவைக்கிற பாரதிபாலன் என்னென்னவோ சொல்ல வருகிறார்!
இந்த மழை மட்டும் தான் அப்படியே இருக்கிறது .எப்போதும் போல எல்லோருக்கும் பெய்துகொண்டு என்று முடிகிற தொகுதியின் இறுதிக்  கதையின் இறுதி  வரி என்னமோ சொல்லவில்லை?
போலிப் புதுமை , பிலுக்கிக்காட்டும் படாடோபமற்ற இந்தத் தொகுதியில் ஒரு மேன்மையான மென்மையான ஆத்மா தெரிகிறது.அதன் முடிவற்ற பயணம் விளங்குகிறது.
2012ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க தொகுதி என்று முத்திரை வேண்டுமானால் குத்தி மகிழலாம். ஆனால் முத்திரைகளுக்கு அப்பாலே  போகிற கலைஞன் ?அவன் தரிசனங்களைத் தொடர்ந்துகொண்டே இருப்பான்.
வையவன் 

No comments:

Post a Comment